நிவர் புயல் நிலவரம்: புயல் கரையை கடக்கும்போது நீங்கள் என்ன செய்யக் கூடாது?

nigar cyclone status in tamil news

நிவர் புயல் இன்று (நவம்பர் 25) நள்ளிரவு அல்லது நாளை (நவம்பர் 26) அதிகாலை நேரத்தில், காரைக்கால் மற்றும் மகாபலிபுரத்துக்கு இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

அவ்வாறு புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று 10 முக்கிய தகவல்களைத் தொகுத்து வழங்குகிறோம்.

1. புயல் வரும் சமயத்தில் வெளியே, குறிப்பாக கடற்கரைப் பகுதிகளுக்கு, சென்று விடியோ எடுப்பது, செல்ஃபி எடுப்பது போன்றவற்றில் ஈடுபடக் கூடாது. இது உயிருக்கே ஆபத்தாக அமையலாம்

2. வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும். வீட்டின் கதவோ, சன்னல் கதவோ நல்ல நிலையில் இல்லாவிட்டால், அதை உடனடியாக சரி செய்துகொள்வது நல்லது.

3. காற்றின் அழுத்தத்தால் சன்னல் கண்ணாடிகள் விரிசல் விட்டு உடையவோ, உடைந்து சிதறவோ வாய்ப்புண்டு. மரப்பலகை, துணி ஏதேனும் இருந்தால், சன்னலை அதை வைத்து மூடிக்கொள்ளுங்கள். கண்ணாடித் துண்டுகள் காற்றின் வேகத்தில் வீட்டுக்குள் சிதறுவதை அது தடுக்கும்.

4. சிதிலமடைந்த கட்டடங்கள் மற்றும் பழைய கட்டடங்களுக்கு உள்ளேயோ அருகிலோ இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

5. பலத்த காற்றின் காரணமாக மின் இணைப்பு துண்டிப்பு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டார்ச் லைட், பவர் பேங்க், மெழுகுவர்த்தி, இன்வர்ட்டர் போன்றவற்றை தயார் செய்து வைத்துக்கொள்வது பாதுகாப்பானது.

6. பலத்த மழையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் முன்னெச்சரிக்கையாக காய்கறிகள், உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துகளை ஓரிரு நாட்களுக்கு தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

7. உங்கள் பகுதியில் உள்ள அரசு மற்றும் தொண்டூழிய அமைப்புகளின் உதவி எண்களைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

8. மின்சாரம் இல்லாமல் போனால், தொலைக்காட்சி செய்திகளை எல்லோரும் பார்க்க முடியாது. செல்பேசியே தகவல்களை பெற வழியாக இருக்கும். பேட்டரியில் இயங்கும் பழைய டிரான்சிஸ்டர் இருந்தாலும் அது உதவியாக இருக்கும். அதனால் சமூக ஊடகங்களில் வரும் அனைத்து தகவல்களையும் நம்பி விடாமல், போலிச் செய்திகள் குறித்து கவனமாக இருங்கள்.

9. புயல் கரையைக் கடக்கும்போது பொதுமக்கள் வெளியே நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும். வேறு வழியில்லாமல் வெளியே செல்ல நேர்ந்தால் கவனமாக இருக்கவும். இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் கவனம் தேவை.

10. கனமழையும் புயலுடன் சேர்ந்து வரும். தாழ்வான பகுதிகளில் உங்கள் வீடு இருந்தால், விலைமதிப்புள்ள பொருட்களையும் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை பத்திரப்படுத்திவிட்டு, நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது நல்லது.

இது கொரோனா காலம். புயல், மழை என எது வந்தாலும் சுகாதாரம் மற்றும் சமூக விலகல் விதிகளை இயன்றவரை கடைப்பிடியுங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :