கத்துவா பாலியல் வல்லுறவு: காஷ்மீர் முஸ்லிம் சிறுமி குடும்பத்தின் இன்றைய நிலை என்ன?

  • மாஜித் ஜஹாங்கீர்
  • கத்துவா, ஜம்முவிலிருந்து பிபிசிக்காக

சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2018 ஜனவரியில் ஜம்மு கஷ்மீரில் உள்ள கத்துவா என்ற இடத்தில் எட்டு வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டது. இன்றளவும் கூட, சிறுமியின் குடும்பத்தினர் மிகுந்த துக்கத்தில் உள்ளனர், அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

அந்த எட்டு வயது சிறுமியின் தாய், "எங்கள் வாழ்க்கை மாறவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போலவே தான் இன்றும் இருக்கிறது. நாங்கள் ஆடுகளை மேய்த்துத் தான் வாழ்கிறோம். என்றாலும், எங்கள் மகளின் நினைவு நெருப்பாக இன்றும் எங்களைத் தகித்து வருகிறது. எங்கள் மகளை எப்படி மறக்க முடியும். நாங்கள் இப்போது எங்கள் மகள்களை வெளியே எங்கும் அனுப்புவதில்லை. எங்கள் (இறந்த) மகளுக்கு நேர்ந்த கொடுமை எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திவருகிறது." என்று பிபிசியிடம் கூறினார்.

2018 ஜனவரியில், ஜம்முவின் கத்துவாவில் உள்ள ஒரு கிராமத்தில் ஆடு மேய்க்கும் நாடோடி சமுதாயத்தைச் சேர்ந்த ஓர் இஸ்லாமியச் சிறுமி, கடத்தப்பட்டு, 11 நாட்களுக்குப் பிறகு அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் குற்றப்பிரிவு தனது விசாரணையில், 'சிறுமி கடத்தப்பட்டார், அவருக்கு போதை மருந்து வழங்கப்பட்டது, பின்னர் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்' என்று கூறியிருந்தது.

"சிறுமியை கிராமத்தின் உள்ளூர் கோயிலுக்குள் வைத்திருந்தார்கள்" என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில், கிராமத்தைச் சேர்ந்த, சந்தேகத்துக்கிடமான 8 பேரைக் காவல் துறை கைது செய்தது.

மூவருக்கு ஆயுள் தண்டனை

இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்த பிறகு நாடு முழுவதும் இது பற்றிய கண்டனம் வலுத்தது.

2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம், பஞ்சாபின் பதான்கோட்டில் உள்ள நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களில் 6 பேரைக் குற்றவாளிகள் என உறுதி செய்தது.

நீதிமன்றம் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையும், மீதமுள்ளவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது.

இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்த பிறகு, ஜம்மு-காஷ்மீரில் வகுப்புவாதப் பதற்றம் அதிகரித்தது. வலதுசாரி இந்து குழுக்கள் இந்த விஷயத்தில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியதுடன், தங்கள் சமூகத்தினர் கைது செய்யப்படுவதையும் எதிர்த்தனர்.

அப்போதைய ஆளும் கூட்டணிக் கட்சியான பாஜகவைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள், செளத்ரி லால் சிங் மற்றும் சந்திர பிரகாஷ் கங்கா ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஒரு கொடி ஊர்வலத்தை நடத்தினர். இது கடும் விமர்சனத்துக்குள்ளானது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி காஷ்மீரில் போராட்டங்களும் நடந்தன.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இது குறித்த சத்தம் நின்று விட்டது. ஆனால் துக்கம் குறையவில்லை.

'உறவினர்களும் எங்களைக் கண்டுகொள்ளவில்லை'

சிறுமியின் தந்தை பிபிசியிடம், "என் மனைவி மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார், அவரால் இன்னும் பேசமுடியவில்லை. என் மகள், என் ரத்தம். என் மகளின் கொலை என்னை மோசமாகப் பாதித்துள்ளது. என் மன நிலை என்னவென்று எனக்கு மட்டும் தான் தெரியும்."

இது போன்ற செய்திகள் வெளியாகும் போது, ​​இந்தக் குடும்பத்தின் வேதனை அதிகரிக்கிறது.

"கடந்த ஆண்டு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது வருத்தமளிக்கிறது. உத்தர பிரதேசத்தில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டார், மற்றொரு பெண் வேறு எங்கோ ஒரு இடத்தில் கொலை செய்யப்படுகிறார். இது நடக்கக்கூடாது. அரசாங்கம் இதையெல்லாம் நிறுத்த வேண்டும். தங்கள் மகள்களுக்கு இது போன்ற கொடுமை நடந்தால், அந்தப் பெற்றோரின் மன நிலை என்ன என்பதை நாங்கள் அறிவோம்."

இந்த சம்பவம் நடந்து நீண்ட காலமாகியிருந்தாலும், தங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தங்களை விட்டு விலகிவிட்டனர் என்று அந்தத் தந்தை தெரிவிக்கிறார்.

சிறுமியின் தந்தை, "இந்த சம்பவத்திற்குப் பிறகு, எங்கள் உறவினர்கள் எங்களைக் கண்டு கொள்வதே இல்லை. ஊடகங்கள் மட்டும்வந்து எங்கள் நிலை குறித்துக் கேட்கிறார்கள். நாங்கள் எப்படி இருக்கிறோம், என்ன நடந்தது, என்ன தேவை என்று கேட்பார் யாருமில்லை. அவர்கள் பெயருக்குத் தான் உறவினர்கள்," என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.

அச்சத்தின் பிடியில் சிறுமியின் தந்தை

நாங்கள் பயத்தில்தான் இருக்கிறோம் என்பது உங்களுக்கே தெரியும் என்று கூறும் பாதிக்கப்பட்டவரின் தந்தை, "நாங்கள் இங்கே ஒரு சில முஸ்லிம்கள் தான் இருக்கிறோம். எங்கள் வீட்டுக்கு இரு புறமும் இந்துக்கள். நாங்கள் மிகவும் பயத்தில் இருக்கிறோம்," என்று கூறினார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி, "அந்த விபத்துக்குப் பிறகு எங்கள் உலகமே மாறிவிட்டது. அந்த துரதிர்ஷ்டவசமான விபத்து நடந்தபிறகு , ​​என்னால் பல மாதங்கள் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. நான் மிகவும் பயந்திருந்தேன், என் சகோதரி உயிருடன் இருந்தபோது, எங்கள் உலகமே வேறாக இருந்தது," என்று கூறுகிறார்.

பகர்வால் என்பது யார்?

ஜம்மு-காஷ்மீரில், பகர்வால் எனப்படும் ஆடு மேய்க்கும் சமூகத்தினர், ஒவ்வோர் ஆண்டும் கோடை மற்றும் குளிர்காலத்தில் நாடோடிகளைப் போல தங்கள் வசிப்பிடங்களை மாற்றுகின்றனர். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஜம்மு-காஷ்மீரில் ஒரு லட்சத்து 31 ஆயிரம் பகர்வால்கள் வசித்து வந்தனர். அவர்கள் இந்தப் பகுதி முழுவதும் பரவலாகக் காணப்பட்டனர்.

பகர்வால்களின் முக்கிய வாழ்வாதாரம், ஆடு வளர்ப்பு தான். அவர்களில் பெரும்பாலோர் சுன்னி முஸ்லிம்கள். பாரம்பரியமாக, தங்கள் ஆடுகளுடன், கோடை மற்றும் குளிர்காலங்களில் அவர்கள் கஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் ஜம்மு பகுதிக்கு வருகிறார்கள்.

குற்றவாளிகளின் குடும்பங்களின் நிலை என்ன?

மறுபுறம், குற்றவாளிகளின் குடும்ப உறுப்பினர்களும் இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தங்களுக்கு மிகவும் துயரமான சூழல் நிலவுவதாகக் கூறுகின்றனர்.

இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் ஓய்வு பெற்ற வருவாய்த் துறை ஊழியர் சாஞ்சி ராமின் மகள் மது, "இந்த வழக்கு எங்கள் மீது ஓர் இடியாக இறங்கியது. நாங்கள் எப்படி தப்பித்தோம் என்று எங்களுக்கே தெரியவில்லை" என்றார்.

"நாங்கள் நடை பிணங்களாகத் தான் வாழ்ந்து வருகிறோம். குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒருவர் திடீரெனச் சிறையில் அடைக்கப்படும் சூழ்நிலையில், அவருடைய குடும்பம் எவ்வாறு தத்தளிக்கும் என்று நீங்கள் யூகிக்க முடியும். இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தபோது பல மாதங்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி, சிபிஐ விசாரணை கோரினோம். பல நாட்கள் நாங்கள் வெறும் தண்ணீர் மட்டுமே குடித்து வாழ்ந்தோம். ஆனால் அனைத்தும் வீணானது. யாரும் எங்கள் கோரிக்கைக்குச் செவி சாய்க்கவில்லை "

அரசியல் கட்சிகளை விமர்சிக்கும் மது, அவை, அரசியல் ஆதாயத்தை மட்டுமே பெற விரும்புவதாகக் கூறுகிறார்.

"பாஜகவோ, காங்கிரசோ அல்லது வேறு எந்த கட்சியோ எங்களுக்கு உதவவில்லை. நாங்கள் அனைவரும் அவர்களால் பயன்படுத்திக்கொள்ளப்பட்டோம்" என்று அவர் கூறுகிறார்.

ஒருநாள் உண்மை வெளிவரும் என்று மூன்று ஆண்டுகளாக உண்மை வெளிவருவதற்காக தனது தாய் காத்திருப்பதாக மது கூறுகிறார்.

"உண்மை எப்போது வரும் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் ஒரு நாள் உண்மை வெளி வரும் என்று நான் நம்புகிறேன்." என்று அவர் கூறுகிறார்.

தனது தந்தை குற்றம் சாட்டப்படுவதற்குக் காவல்துறையின் புனைவுக் கதைகளே காரணம் என்று மது கூறுகிறார்..

இந்தச் சம்பவத்தால், தங்கள் வீட்டின் மீது கல்லெறி சம்பவங்கள் ஏராளமாக நிகழ்ந்ததாக மது கூறுகிறார். தங்கள் வாழ்வுரிமையைப் பறிப்பதாகச் சிலர் சபதம் செய்ததாக அவர் கூறுகிறார்.

இந்த வழக்கு அவர்களை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் வந்து இவர்களின் குடும்பச் செலவினங்களுக்காகப் பணம் கொடுத்துச் செல்கின்றனர்.

கண்ணீரைத் துடைத்துக்கொண்டு பேசும் மது, "இதை நான் யாரிடமும் சொல்லக்கூடாது, ஆனால் நீங்கள் ஓர் ஊடகவியலாளர் என்பதால், நான் நிச்சயமாக உங்களுடன் பகிர்ந்து கொள்வேன். எங்கள் தந்தை கைது செய்யப்பட்ட பின்னர் எங்கள் நிலை மோசமடைந்துள்ளது. மக்கள் எங்கள் வீட்டிற்கு வந்து ஆயிரம், ஐயாயிரம் என்று பணம் கொடுத்துச் செல்கின்றனர். சாப்பாட்டுச் செலவுக்கூட பணமில்லாத நிலையில் இருக்கிறோம்," என்று கூறுகிறார்.

மதுவின் முகம் கோபத்தால் சிவக்கிறது. எங்களைப் போன்ற ஏழை மக்கள் தனிப்பட்ட மற்றும் அரசியல் நலன்களுக்காகப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படுகிறார்கள் என்று அவர் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :