டெல்லி அருகே ஃபரிதாபாத்தில் பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் பெண் - முழு விவரங்கள்

murdering girl student in Ballabhgarh, Faridabad

இந்தியாவின் முக்கிய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

டெல்லி அருகே பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் பெண் - முழு விவரங்கள்

டெல்லி அருகே உள்ள ஃபரிதாபாத் நகரில் 20 வயதாகும் கல்லூரி மாணவி ஒருவர் திங்களன்று அவரது கல்லூரி வாசலிலேயே சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

நிகிதா தோமர் எனும் அந்த மாணவியின் கொலை அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவானது. இது தொடர்பாக தெளசீப், அவரது நண்பர் ரெகான் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள தெளசீப் மற்றும் கொலையான நிகிதா ஆகியோர் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள் என்று அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

தெளசீப் தனது மகளுக்கு பல மாதங்களாகவே தொல்லை கொடுத்து வந்தார் என்றும், மதம் மாறி தம்மைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார் என்றும் நிகிதாவின் தந்தை மூல் சந்த் தோமர் கூறியுள்ளார் என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி.

காரில் வந்தவர்கள் முதலில் நிகிதாவை காருக்குள் இழுத்துச் செல்ல முயன்றதாகவும், பின்னர் அவரைச் சுட்டுக் கொன்றதாகவும் சம்பவத்தின்போது உடனிருந்த நிகிதாவின் தோழி கூறியுள்ளார்.

2018இல் ஏற்கனவே தெளசீப் நிகிதாவைக் கடத்தியதாகவும், உள்ளூர் பஞ்சாயத்து நடத்தப்பட்டு, நிகிதாவின் குடும்பத்தினர் தெளசீப் மீதான வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டதாகவும் காவல் துறை வட்டாரங்கள் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவிக்கிறது.

தெளசீபின் உறவினர் அஃப்தாப் அகமது என்பவர் ஹரியானா மாநில காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இனிமேல் தங்கள் மகன் நிகிதாவை தொந்தரவு செய்ய மாட்டார் என அவரது குடும்பத்தினர் 2018இல் உறுதியளித்தனர் என்று அந்தச் செய்தி விவரிக்கிறது.

ஹரியானா காவல்துறை விசாரித்து வரும் இந்த வழக்கு தொடர்பாக, அந்த மாநில மகளிர் ஆணையம் அறிக்கை அளிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

பிகார் சட்டமன்றத் தேர்தல்

பிகார் சட்டமன்றத் தேர்தலுக்கான மூன்று கட்ட வாக்கு பதிவில் முதற்கட்ட வாக்கு பதிவு இன்று தொடங்குகிறது என தினத்தந்தி செய்தி தெரிவிக்கிறது.

கொரோனா பரவலுக்கு பின் இந்தியாவில் நடக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது.

இந்த தேர்தலில் 114 பெண்கள் உள்பட 1,066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 71 தொகுதிகளுக்கு நடைபெறும் முதற்கட்ட வாக்கு பதிவில் முதல் அமைச்சர் நிதிஷ் குமாரின் அமைச்சரவையில் உள்ள ஆறு அமைச்சர்களின் அரசியல் எதிர்காலம் நிர்ணயம் செய்யப்படும்.

மூன்று கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய அரசு 30 ஆயிரம் மத்திய பாதுகாப்பு படை வீரர்களை குவித்து உள்ளது. மாவோயிஸ்டுகள் அதிகமுள்ள தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான பல்வேறு விதிமுறைகளும் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளன. 7 லட்சம் சேனிடைசர்கள், 46 லட்சம் முகக் கவசங்கள், 6 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், 6.7 லட்சம் 'ஃபேஸ் ஷீல்டு' முகக் கவசங்கள், 23 லட்சம் ஜோடி கையுறைகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் இரண்டு கோடி பேர் வாக்களிக்கின்றனர்.

இதுதவிர 80 வயது கடந்த மூத்த குடிமக்கள் அல்லது மாற்று திறனாளிகள் வாக்களிக்க வசதியாக தபால் ஓட்டு நடைமுறையும் உள்ளது. இதன்படி, 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது என்கிறது தினத்தந்தி செய்தி.

துரைக்கண்ணு உடல்நிலை எப்படி உள்ளது?

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக வேளாண்துறை அமைச்சா் துரைக்கண்ணு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளாா் என்கிறது தினமணி செய்தி .

அவருக்கு உயிா் காக்கும் உயா் மருத்துவ சிகிச்சைகள் தொடா்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன.

மூச்சுத்திணறல் பாதிப்பு காரணமாக சென்னை, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரைக்கண்ணுவுக்கு கரோனா தொற்று இருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது. அதற்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறையத் தொடங்கின.

அதுமட்டுமல்லாது அவரது நுரையீரலில் 90 சதவீதம் தொற்று ஏற்பட்டதால் செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா். இருப்பினும் அவரது உடல் நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதுமில்லை என்று மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா் என்கிறது அந்தச் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: