நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி – OMR விடைத்தாள்கள் மாறியிருப்பதாக குற்றச்சாட்டு

  • மு. ஹரிஹரன்
  • பிபிசி தமிழுக்காக
படக்குறிப்பு,

கோப்புப் படம்

இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் மாணவர்களின் OMR விடைத்தாள்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெற முடியாமல் போனதாகவும் தேர்வு எழுதிய மாணவர்கள் பலர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

கோவையைச் சேர்ந்த மனோஜ், நீட் தேர்வு முடிவுகள் வெளியான மறுநாளிலிருந்தே இந்த குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். இது குறித்து பிபிசியிடம் பேசிய அவர், ''நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்பு தேசியத் தேர்வு முகமையின் இணையதளத்தில் மூன்று முறை எனது OMR விடைத்தாளை பார்வையிட்டு, விடைகளோடு ஒப்பிட்டு மதிப்பெண்களை கணக்கிட்டேன். அதன்படி 550 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும் என கணித்திருந்தேன். ஆனால், தேர்வு முடிவுகளில் 248 மதிப்பெண்கள் என்றே வந்திருந்தது.''

''அதிர்ச்சியடைந்த நான் OMR விடைத்தாளை பார்வையிட்டு மறுமுறை விடைகளை சரிபார்க்கலாம் என யோசித்தேன். OMR விடைத்தாளை பார்வையிடுவதற்கான இணையதளத்திற்குள் சென்று பார்க்கையில், மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. என் பெயர் மற்றும் தகவல்களோடு வேறொரு விடைத்தாள் அதில் இருந்தது,'' என மனோஜ் கூறினார்.

''தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பு தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த விடைத்தாள்தான் என்னுடையது. இப்போது வந்துள்ள விடைத்தாள் என்னுடையதில்லை. எனது விடைத்தாளில் குளறுபடிகள் நடந்துள்ளதால்தான் குறைவான மதிப்பெண்கள் வந்துள்ளன என்பதை தெரிந்து கொண்டேன்.

இது குறித்து, யாரிடம் முறையிடுவது என்று கூட ஆரம்பத்தில் தெரியவில்லை. உடனடியாக தேசிய தேர்வு முகமைக்கு புகார் மின்னஞ்சல்கள் அனுப்பினேன். எனது புகாரை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் வந்துள்ளது. எனது விடைத்தாளை பெறுவதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் நான் தயாராக இருக்கிறேன்,'' என தெரிவிக்கிறார் மனோஜ்.

படக்குறிப்பு,

கோப்புப் படம்

நீட் தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பு தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் பார்வையிட்ட தனது விடைத்தாளை, இவர் ஸ்கிரின்ஷாட் செய்து நகல் எடுத்து வைத்துள்ளார். இந்த குளறுபடியை நிரூபிக்க அதனையே முக்கிய ஆதாரமாக இவர் முன்வைக்கிறார்.

இதேபோன்று தனது பெயரில் இரு வேறு OMR விடைத்தாள்கள் இணையதளத்தில் கிடைக்கப் பெற்றதாக புகார் தெரிவிக்கிறார், மாணவி ரினோஷா.

''இம்மாதம் 6ம் தேதி தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் OMR விடைத்தாள் வெளியிடப்பட்டது. அதில் எனது விடைத்தாளை பார்வையிட்டபோது, 556 மதிப்பெண்கள் வந்தது. ஆனால், தேர்வு முடிவுகளை பார்த்தபோது 106 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்திருந்தது. மீண்டும் எனது OMR விடைத்தாளை பார்வையிட முயற்சித்தேன். தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் OMR விடைத்தாளை பார்வையிடுவதற்கான புதிய இணையதளம் உருவாக்கப்பட்டிருந்தது. அதில் சென்று பார்க்கையில் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. OMR விடைத்தாளின் மேல் மற்றும் கீழ் பகுதி மட்டுமே எனதாக இருந்தது. அதில் குறிக்கப்பட்ட விடைகள் அனைத்தும் நான் குறித்ததாக இல்லை,'' என்கிறார் இவர்.

''இது குறித்து தேசிய தேர்வு முகமைக்கு கடந்த 10 நாட்களில் 720 மெயில்கள் அனுப்பியுள்ளேன். இதுவரை பதில் வரவில்லை. நீட் தேர்வுதான் வாழ்க்கை என நம்பியிருந்த எனக்கு அடுத்தகட்டமாக என்ன செய்வது என தெரியவில்லை,'' என கலங்குகிறார் மாணவி ரினோஷா.

நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கையில் ஏற்பட்ட குழப்பங்களாலும், விடைத்தாள்கள் குளறுபடிகளாலும் தேர்வு எழுதிய மாணவர்களும், பெற்றோர்களும் தற்போது கடும் மன உளைச்சலில் இருப்பதாக கூறுகிறார் ரினோஷாவின் தந்தை சையது ஹம்சா.

''எனது மகள் நன்றாக படிக்கக் கூடியவள். பத்தாம் வகுப்பு முதலே நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்த ஆண்டு முதல்முறையாக நீட் தேர்வு எழுதினார். தேர்வு முடிந்த பின்னர் இணையதளத்தில் தனது விடைத்தாளை ஆய்வு செய்தபோது நல்ல மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால், நினைத்தவாறு மதிப்பெண்கள் வரவில்லை. மீண்டும் விடைத்தாளை பார்வையிட்டபோது எனது மகளின் பெயரில் வேறு விடைத்தாள் வருகிறது.''

''சுமார் 2 ஆண்டுகள் படித்து பயிற்சி பெற்றவள் இந்த விடைத்தாள் குளறுபடியால் இப்போது மனச்சோர்வில் இருக்கிறாள். அவள் மட்டுமல்ல நாங்களும் இந்த பிரச்சனையால் மன அழுத்தத்தில் இருக்கிறோம். இந்த குளறுபடிகள் குறித்து மாணவர்களின் புகார்களை கூட கேட்பதற்கு தேர்வு நடத்தியவர்கள் முயற்சித்ததாக தெரியவில்லை. இதுகுறித்து, தினமும் ஏராளமான மெயில்கள் அனுப்பியுள்ளோம். ஒரு பதில் கூட இன்று வரை வரவில்லை. தேர்வு முடிவுகள் அறிவித்ததில் ஏற்பட்ட குழப்பங்கள், மாணவர்களின் விடைத்தாள் மாற்றம் இவை அனைத்தும் தேர்வு நடத்தும் அமைப்புகளின் நம்பகத்தன்மையை குலைக்கிறது,'' என்கிறார் ரினோஷாவின் தந்தை.

இதேபோன்ற குற்றச்சாட்டை அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி மஞ்சு முன்வைக்கிறார். தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் விடைத்தாள்கள் மாற்றப்பட்டுள்ளதாக நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் புகாரளித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து கடந்த 20ம் தேதி தேசியத் தேர்வு முகமை ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தது.

''முறையான ஆய்வுகளுக்கு பிறகே நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அதில் தவறுகள் இருக்க வாய்ப்பில்லை. இருந்தும், நீட் தேர்வு முடிவுகளில் தவறு இருப்பதாக தேர்வு எழுதியவர்களில் சிலர் பத்திரிக்கைகளிலும், சமூக வலைதளங்களிலும் பொய்யான தகவல்களை பதிவிட்டு வருகின்றனர். அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், உண்மையான புகார்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து பிபிசியிடம் பேசிய கல்வியாளர் நெடுஞ்செழியன், தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிப்பது மிகவும் அவசியம் என்ற கருத்தை முன்வைக்கிறார்.

''விடைத்தாள் மாறியிருப்பதாக புகார் தெரிவத்துள்ள மாணவர்களில் சிலர் மட்டுமே தேர்வு முடிவுக்கு முன்னர், அவர்கள் பார்வையிட்ட விடைத்தாளை முன்னெச்சரிக்கையாக ஸ்கிரின்ஷாட் செய்து நகல் எடுத்து வைத்துள்ளனர். ''

''இதனால், மற்ற மாணவர்களின் புகார்கள் மீது நம்பகத்தன்மை அடிப்படையில் சந்தேகங்கள் எழுகிறது. இது மாணவர்களின் தவறு கிடையாது. தேசிய அளவிலான தேர்வு நடத்தும் அமைப்பு தேர்வு முடிவுக்கு பின்னர் எப்படி விடைத்தாளை தரவிறக்கம் செய்வதற்கான வசிதியை உருவாக்கியுள்ளதோ, அதேபோல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னர் தரவிறக்கம் செய்வதற்கான வசதியை வழங்கவில்லை. ஐஐடி தேர்வு நடைமுறைகளைப் போல் விடைத்தாளை பார்வையிட விரும்பும் மாணவர்களுக்கு அதை மெயிலில் அனுப்பியிருக்கலாம். இந்த நடைமுறை பின்பற்றப்பட்டிருந்தால் விடைத்தாள் குறித்த குளறுபடிகள் தற்போது நேர்ந்திருக்காது. எனவே, தேர்வு நடத்தும் அமைப்பில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதை இவை நமக்கு உணர்த்துகின்றன,'' என்கிறார் இவர்.

''தேசிய தேர்வு முகமையின் வெளிப்படைத்தன்மை குறித்து எழும் சந்தேகத்திற்கான மற்றொரு காரணம், மாநில அளவிலான நீட் தேர்வு முடிவுகளின் பட்டியலை வெளியிடாமல் இருப்பதுதான். தேர்வு முடிவுகள் வெளியாகும்போது மாநிலங்களுக்கான தேர்ச்சி விகிதம் மற்றும் எண்ணிக்கைகள் வெளியிடப்பட்டிருந்தால், மாநிலங்களில் உள்ள மருத்துவ இடத்திற்கான வாய்ப்புகளை மாணவர்கள் தெரிந்துகொண்டிருப்பர். அதை வெளியிடாதது ஏன்? மேலும். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதுவதில் மோசடி செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? தேர்வு நடத்தும் அமைப்புகளின் இந்த மறைமுகமான போக்கு அதன் மீதான நம்பிக்கையை குலைக்கிறது. எனவே, தேர்வு நடைமுறைகளிலும், மாணவர்களுக்கு தகவல்கள் வழங்குவதிலும் நூறு சதவிகித வெளிப்பைடைத்தன்மை கொண்டதாக தேர்வு நடத்தும் அமைப்புகள் இருக்க வேண்டும்'' என கேட்டுக்கொண்டார் கல்வியாளர் நெடுஞ்செழியன்.

மாணவர்களின் இந்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், விடைத்தாள் குளறுபடிகள் பற்றியும் விளக்கம் கேட்டு கடந்த வெள்ளிக்கிழமை பிபிசி தமிழ் சார்பாக தேசிய தேர்வு முகமைக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. இந்த செய்தி வெளியாகும்வரை, அந்த அமைப்பிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கப்பெறவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :