ஃபேஸ்புக் அங்கி தாஸ்: இந்திய இயக்குநரின் திடீர் விலகல் - அதிகம் அறியாத தகவல்கள்

அங்கி தாஸ்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்திய பொது கொள்கை பிரிவு இயக்குநர் அங்கி தாஸ், திடீரென தமது பொறுப்பில் இருந்து விலகியிருக்கிறார்.

தகவல் தொழில்நுட்பத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் விசாரணைக்கு ஆஜரான நான்கு நாட்களில் அவரது பதவி விலகல் செயல்பாடு பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

அங்கிதா தாஸின் பதவி விலகல் தொடர்பாக ஃபேஸ்புக் இந்திய பிரிவு மேலாண் இயக்குநர் அஜித் மோகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொதுப்பணியில் உள்ள தனது விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் தமது பொறுப்பில் இருந்து அங்கி விலகியிருக்கிறார்," என்று தெரிவித்திருக்கிறார்.

இந்திய அலுவலகத்தின் பிரியாவிடை

ஃபேஸ்புக் நிறுவன கிளை இந்தியாவில் திறக்கப்பட்டது முதல் அதில் கடந்த 9 ஆண்டுகளாக தீவிரமாக பங்காற்றி பங்களிப்பை வழங்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர் அங்கி தாஸ். எனது தலைமையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஏராளமான பங்களிப்பை வழங்கினார். அவரது சேவைக்காகவும் எதிர் காலத்துக்காகவும் வாழ்த்துகளை தெரிவிப்போம் என்று அந்த அறிக்கையில் அஜித் மோகன் கூறியிருக்கிறார்.

ஆனால், இந்தியாவில் ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான கட்சிக்கு சாதகமாக அதன் ஆதரவாளர்களின் பக்கங்களில் பதிவிடும் சர்ச்சைக்குரிய கருத்துகள் மீது நடவடிக்கை எடுக்காமல் எதிர்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சி விமர்சகர்களின் கருத்துகளை குறிவைத்து அவற்றை நீக்கும் நடவடிக்கையில் ஃபேஸ்புக் ஈடுபடுவதாக சமீபத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல தலைவர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

ஆனால், அவற்றை நிராகரித்த ஃபேஸ்புக் நிறுவனம், சமூக ஊடக கொள்கையில் யாருக்கும் சார்பாக இல்லாமல் நடுநிலையாக இடுகைகள் கண்காணிப்பு நடப்பதாக விளக்கம் அளித்தது.

நாடாளுமன்ற குழுவின் தொடர் அழைப்புகள்

இருந்தபோதும் அந்த நிறுவனத்தின் விளக்கத்தால் எதிர்கட்சிகள் திருப்தியடையவில்லை. டெல்லியில் இந்திய தகவல் தொழில்நுட்பத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, ஃபேஸ்புக் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய செயல்பாடு தொடர்பாக கடந்த சில மாதங்களில் ஐந்துக்கும் அதிகமான முறை ஃபேஸ்புக் இந்திய பிரிவு நிர்வாகிகளை அழைத்து விளக்கம் கேட்டிருக்கிறது. அதில் சிலவற்றில் அங்கி தாஸும் அவரது குழுவினரும் ஆஜராகி விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

இந்தியாவில் ஃபேஸ்புக் பயனர்களாக சுமார் 30 கோடிக்கும் அதிகமானோர் உள்ளனர். இதனால், அமெரிக்க தேர்தலில் வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் ஃபேஸ்புக் செயல்பாடுகள் அமையலாம் என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி, தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், டைம் இதழ் ஆகியவை, ஃபேஸ்புக் தொடர்பாக வெளியிட்ட செய்திகளில், தனது பக்கங்களில் பதிவிடப்படும் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளை சீரான முறையில் கண்காணித்து தணிக்கை செய்ய அந்நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டிருந்தன.

உதாரணமாக, கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி கலவரம் தொடர்பாக மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியினர் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகள் தடையின்றி அந்த தளத்தின் பக்கங்களில் பகிரப்பட அந்நிறுவனம் அனுமதித்த செயல்பாட்டை அந்த நாளிதழ்கள் குறிப்பிட்டிருந்தன.

சர்ச்சையை ஏற்படுத்திய நாளிதழ் செய்திகள்

மேலும், ஒரு செய்தியில் ஃபேஸ்புக்கின் இந்திய பிரிவு நிர்வாகி அங்கி தாஸின் பெயரைக் குறிப்பிட்டு, ஃபேஸ்புக் தணிக்கை பிரிவில் இடம்பெற்ற ஊழியர்களிடம் பாஜகவினரின் கருத்துகளை தணிக்கை செய்தால், அது தொழில் ரீதியாக இந்தியாவில் ஃபேஸ்புக் வாய்ப்புகளில் பாதகமாக அமையலாம் என்று கூறியதாக அந்த நாளிதழ்கள் குறிப்பிட்டன.

இதற்கு ஆதாரமாக, ஃபேஸ்புக் ஊழியர்களுக்கு அவர் அனுப்பிய மின்னஞ்சல் தொடர்பு பரிவர்த்தனை வரிகளை, அந்த நாளிதழ்கள் வெளியிட்டிருந்தன.

மற்றொரு செய்தியில் 2012ஆம் ஆண்டில் குஜராத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு சமூக ஊடக தேர்தல் பரப்புரை தொடர்பாக அங்கி தாஸ் பயிற்சி கொடுத்ததாக வால் ஸ்ட்ரீட் கூறியிருந்தது.

2014ஆம் ஆண்டில் இந்தியாவில் நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி கூட்டணி, ஆட்சியை பிடித்தபோது நரேந்திர மோதியின் சமூக ஊடக பிரசாரத்துக்கு நாம் ஒரு தீப்பொறியாக இருந்தோம். அதன் பின் நடந்தவை எல்லாம் வரலாறு என அங்கி தாஸ் கூறியிருந்தார்.

மேலும் ஒரு உள்ளுறை மின்னஞ்சல் குறிப்பில் சக ஃபேஸ்புக் ஊழியர், நரேந்திர மோதியின் தனிப்பட்ட பக்கத்தை விட, காங்கிரஸ் கட்சியின் பக்கத்தை அதிகம் பேர் பின்தொடருகிறார்களே என குறிப்பிட்டபோது, காங்கிரஸுடன் ஒப்பிட்டு மோதியை சிறுமைப்படுத்தாதீர்கள் என்றும் அங்கி தாஸ் கூறியதாக அந்த நாளிதழ் கூறியிருந்தது.

அங்கி தாஸின் இதுபோன்ற செயல்பாடு, ஃபேஸ்புக் நிறுவனத்தின் உலகளாவிய நடுநிலைமை கொள்கைக்கு எதிராக இருப்பதாக சக ஊழியர்கள் கேள்வி எழுப்பும் நிலைக்கு வழிவகுத்ததாகவும், அந்த நாளிதழ்கள் கூறியிருந்தன.

இந்த விவகாரம் இந்தியாவில் கடுமையான அரசியல் சர்ச்சைகளுக்கும் வழிவகுத்தது.

ஃபேஸ்புக் விளக்கம்

இது தொடர்பாக விளக்கம் அளித்த ஃபேஸ்புக் நிறுவனம், அங்கி தாஸின் மின்னஞ்சல் பரிவர்த்தனை தொடர்புகள், முழுமையாக புரிந்து கொள்ளப்படாமல் மிகைப்படுத்தி ஊடகங்களி்ல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சார்பில்லாமல் நடுநிலையுடன் செயல்படும் கொள்கையில் தமது நிறுவனம் உறுதியுடன் இருப்பதாகவும் கூறியது.

இருந்தபோதும், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்குக்கு கடிதம் எழுதி அவரது கவனத்தை ஈர்க்கும் அளவுக்குத் தீவிரமானது.

இதே வேளை, ஃபேஸ்புக் நிறுவனத்தின் விளக்கம் அறிய அங்கி தாஸ், அஜித் மோகன் ஆகியோரை வரவழைத்த நாடாளுமன்ற நிலைக்குழு, கடுமையான முறையில் அதன் அதிருப்தியை இருவரிடமும் பதிவு செய்தது.

இந்திய வாக்காளர்களின் தனியுரிமை தகவல்கள், விளம்பர நோக்கத்துக்காகவோ தேர்தல் நோக்கங்களுக்காகவோ பயன்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது என்று நாடாளுமன்ற குழு ஃபேஸ்புக் நிர்வாகிகளிடம் எச்சரித்திருந்தது. பயனர்களின் அந்தரங்க தகவல்களை பாதுகாக்க தனது வருமானத்தில் எவ்வளவு சதவீதத்தை ஃபேஸ்புக் செலவிடுகிறது என்றும் அந்த கூட்டத்தில் இடம்பெற்ற எம்.பிக்கள் பலரும் கேள்வி எழுப்பினார்கள். பல கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாதபடி ஃபேஸ்புக் நிர்வாகிகள் மெளனம் காத்ததாக அந்த கூட்டத்தில் இடம்பெற்ற குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

சட்டமன்ற குழு அழைப்பை நிராகரித்த ஃபேஸ்புக்

மறுபுறம் டெல்லி சட்டமன்றத்தின் அமைதி மற்றும் நல்லிணக்க குழுவும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு அழைப்பானை அனுப்பியது. ஆனால், ஃபேஸ்புக் பிரதிநிதிகள் அந்த குழு குறிப்பிட்ட நாளில் ஆஜராகவில்லை.

பாரதிய ஜனதா கட்சி, அது தொடர்புடைய எதிர்கட்சிகளின் வெறுப்புணர்வைத் தூண்டும் குற்றச்சாட்டுகள், எதிர்கட்சிகள் மீது பாஜக முன்வைத்த குற்றச்சாட்டுகள் என கடந்த ஒராண்டுக்குள்ளாகவே ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பலவும் இந்தியாவில் தீவிரமாக முன்வைக்கப்பட்டன.

இந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கின் முகமாக அங்கி தாஸ் அறியப்பட்டு ஊடக வெளிச்சத்திலும் இடம்பிடித்தார்.

அவர் பதவி விலகலுக்கும் இந்தியாவில் தீவிரமான அரசியல் சர்ச்சைகளுக்கும், ஃபேஸ்புக்கின் இந்திய மேலாண் இயக்குநர் அஜித் மோகன் எந்த தொடர்பையும் ஏற்படுத்தாமல், கெளரவமாகவே அங்கி தாஸுக்கு பிரியாவிடையை தனது மின்னஞ்சல் மூலமாக வழங்கியிருக்கிறார்.

இதே சமயம், அங்கிதாஸ் தனது பதவி விலகல் முடிவை சக ஊழியர்களிடம் பகிர்ந்து கொண்ட மின்னஞ்சலில், "2011ஆம் ஆண்டில் நான் ஃபேஸ்புக் நிறுவன பொறுப்பில் இணைந்தேன். இன்டர்நெட் வளர்ச்சி மிகவும் குறைவாக இருந்த நூற்றாண்டில் சமூக ஊடகமும் பொருளாதார கணக்கீடுகளும் எவ்வாறு பலன் தரப்போகின்றன என நான் வியந்த காலம் அது. அறியப்படாத சிறிய குழுவாக தொடங்கி பிறகு எங்களுடைய நோக்கமாக இந்தியாவை இணைப்போம் என்ற தாரக மந்திரத்துடன் பணியைத் தீவிரமாக்கினோம். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அதை பெருமளவில் எட்டியிருக்கிறோம். எனது தனிப்பட்ட பொது நோக்கங்களை எட்டும் வகையில் தற்போது ஃபேஸ்புக் பொறுப்பை துறக்கிறேன். இந்த அழகிய உலகை உருவாக்கிய மார்க் ஜக்கர்பர்குக்கு நன்றிகள். சிறப்பானவர்கள் பணியாற்றும் சிறப்பான நிறுவனம் இது. நாம் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் தொடர்பில் இருப்போம்" என்று அங்கி தாஸ் கூறியிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :