இந்திய - சீன எல்லை பதற்றம்: சமஸ்கிருத மந்திரங்கள் ஓத ஆயுத பூஜை கொண்டாடிய ராஜ்நாத் சிங்

INDIA CHINA BORDER NEWS

சீனாவுடனான எல்லையில் இந்தியா அமைதியை விரும்புகிறது என்று இன்று இந்திய - சீன எல்லை பகுதியில் ஆயுத பூஜை கொண்டாடிய இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் உள்ள சுக்னா போர் நினைவிடத்தில், இன்று ஆயுத பூஜை கொண்டாடிய ராஜ்நாத் சிங் இவ்வாறு தெரிவித்தார்.

தசரா விழாவை முன்னிட்டு, 'சாஸ்திர பூஜா' என்று வழங்கப்படும் ஆயுத பூஜை வட இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

இந்திய - சீன எல்லை அருகே அமைந்துள்ள சிக்கிம் மாநிலத்தின் ஷேராதாங் பகுதியில் ராஜ்நாத் சிங் இன்று சாஸ்திர பூஜை கொண்டாட இருந்ததாகவும், மோசமான வானிலை காரணமாக அவரால் அங்கு செய்ய முடியவில்லை என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வின் போது ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே உடனிருந்தார்.

"இந்தியாவின் பாதுகாப்புக்காக இந்திய வீரர்கள் தங்கள் உயிரையே தியாகம் செய்துள்ளனர். இந்திய - சீன எல்லைப் பகுதியில் பதற்றம் இல்லாமல் அமைதி பாதுகாக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் கசப்பான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எனினும் நமது நிலத்தின் ஒரு இன்ச் கூட எடுத்துக்கொள்வதை நமது வீரர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.

ஆயுதங்கள், பாதுகாப்புப் படைகளின் தளவாடங்கள் மற்றும் ராணுவ வாகனங்களுக்கு பூசாரிகளால் சமஸ்கிருத மந்திரம் ஓதப்பட்டு, இந்த சாஸ்திர பூஜை நடைபெற்றது.

சனிக்கிழமையன்று சுக்னா அருகே இந்திய ராணுவத்தின் தயார் நிலை குறித்து ராஜ்நாத் சிங் மறு ஆய்வு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிக்கிமில் உள்ள எல்லைப் பகுதி அருகே தற்போது உள்ள நிலவரம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ராணுவ தளபதி ஆகியோருக்கு அங்கிருந்த ராணுவ அதிகாரிகள் விளக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய - சீன ராணுவத்தினர் மோதல்

ஜூன் மாதம் கிழக்கு லடாக் பகுதியில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே மோதல் உண்டான பின்பு லடாக், சிக்கிம், அருணாச்சல் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளை ஒட்டியுள்ள இந்திய - சீன இடையிலான சுமார் 3500 கிலோமீட்டர் எல்லையில் இந்தியா தனது பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையை கடுமையாக அதிகரித்துள்ளது.

எல்லையோரத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது பதற்றத்தை விளைவிக்கும் என்று சீனா இந்தியா மீது குற்றம்சாட்டியது. இதனால் சில மாதங்களுக்கு முன்பு இந்தியா - சீனா இடையே எல்லை பதற்றம் உண்டானது.

ஜூன் மாதம் நடந்த மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்று இந்தியா தெரிவித்தது.

சீன தரப்புக்கும் பாதிப்பு உண்டானது என்று கூறியது சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ். எனினும் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கையை வெளியிடவில்லை.

அதன்பின்னரும் சாலைகள் பாலங்கள் உள்ளிட்டவற்றை அமைத்து இந்தியா தனது எல்லையோர உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது.

இது எல்லைப் பகுதியில் ராணுவத்தினர் மற்றும் ராணுவ தளவாடங்களின் வேகமான போக்குவரத்துக்கு உதவும் என்று இந்தியா கூறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: