பிகார் தேர்தலில் முஸ்லிம்கள், பெண்களின் வாக்கு உண்மையில் யாருக்கு?

  • சஞ்சய் குமார்
  • இயக்குநர், சிஎஸ்டிஎஸ், பிபிசி இந்திக்காக

பிகார் தேர்தல்கள் தொடர்பாக சில கட்டுக்கதைகள் தொடர்ந்து விவாதத்தில் இருக்கின்றன. இருப்பினும், அவற்றின் உண்மைத்தன்மை பற்றி அவ்வளவாக பேசப்படுவதில்லை.

சாதாரண மக்கள் இந்த கட்டுக்கதைகளை உண்மை என்று ஏற்றுக்கொள்கிறார்கள். அவ்வாறான கட்டுக்கதைகள் என்னென்ன, அவற்றின் உண்மை என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

கட்டுக்கதை 1- நிதிஷ் குமாருக்கு பெண் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கின்றனர்

பிகார் பெண்கள் ஏராளமானோர் ஜேடியு (ஐக்கிய ஜனதா தளம்) தலைவர் நிதிஷ் குமாருக்கு வாக்களிப்பதாக பலர் நம்புகிறார்கள். ஆனால் லோக்நீதி -சிஎஸ்டிஎஸ் ஆய்வு முடிவுகளின்படி இது ஒரு கட்டுக்கதை மட்டுமே. அதே நேரத்தில் உண்மை வேறுவிதமாக உள்ளது.

பிகார் பெண்களும் ஆண் வாக்காளர்களைப் போல பிரிந்துள்ளனர். இது ஒரு தேர்தல் பற்றிய விஷயம் மட்டுமல்ல.

நிதிஷ் குமார், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்தாலும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கைகோர்த்திருந்தாலும், கடந்த இரண்டு தசாப்தங்களாக கதை ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே இருக்கிறது.

ஐக்கிய ஜனதா தளம் -பாஜக கூட்டணி 2010ஆம் ஆண்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அப்போது கூட்டணி 39.1 சதவிகித வாக்குகளைப் பெற்றது.

இந்த வெற்றியை பெரும்பாலும் பெண்கள் ஆதரவுடன் தொடர்புப்படுத்தியிருப்பதைப் பலர் கண்டனர். ஆனால் லோக்நீதி-சிஎஸ்டிஎஸ் தரவுகளின்படி, 2010 தேர்தலில் என்டிஏ (தேசிய ஜனநாயக கூட்டணி) 39 சதவிகித மகளிர் வாக்குகளைப் பெற்றது. இது அவர்கள் பெற்ற சராசரி வாக்குகளுக்கு ஒப்பாகவே இருந்தது.

2015 சட்டமன்ற தேர்தலில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் நிதிஷ் குமார் கைகோர்த்து, ஒரு சிறந்த வெற்றியைப் பதிவு செய்தார். அந்தத் தேர்தலில் 41.8 சதவிகித வாக்குகளுடன் அவர் ஆட்சிக்கு வந்தார்.

இந்தத் தேர்தலிலும், நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணிக்கு, 42 சதவிகித மகளிர் வாக்குகள் கிடைத்தன. அதாவது பெண்களின் வாக்கு சதவிகிதம், நிதிஷ் குமார் பெற்ற மொத்த வாக்கு சதவிகிதத்தைப் போலவே உள்ளது. முந்தைய தேர்தல்களிலும் இதே உண்மை காணப்பட்டது.

முதல்வராக நிதிஷ் குமார் பிகாரில் பெண்களுக்காக பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று நம்பப்படுகிறது. இந்தத் திட்டங்களால் ஏராளமான பெண்கள் பயனடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

ஆனால் இது நிதிஷ் குமாருக்கு ஆதரவாக பெண் வாக்காளர்களின் வாக்கு சதவிகிதத்தை மாற்றவில்லை. ஆகவே பொது நலத் திட்டங்கள் தேர்தல்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரியவில்லை.

ஆனால் பிகார் பெண்களின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் சொல்லமுடியாது. அவர்களின் வாக்களிக்கும் சதவிகிதம் ஆண்களை விட அதிகரித்துள்ளது. 2015 சட்டமன்றத் தேர்தலில் பெண்கள் ஆண்களை விட ஏழு சதவிகிதம் அதிகமாக வாக்களித்திருந்தனர். 2010 தேர்தலில் ஆண்களை விட பெண்கள் மூன்று சதவிகிதம் அதிகமாக வாக்களித்தபோது இந்தப்போக்கு தொடங்கியது.

ஆண் வாக்காளர்களை விட பெண்கள் அதிகமாக வாக்களித்தது இந்த மாநிலத்தில்தான் முதல்முறையாக நிகழ்ந்துள்ளது. படித்த மற்றும் வசதியான பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள்தான் தேர்தல்களில் அதிகம் வாக்களிப்பார்கள் என்ற கட்டுக்கதையும் உடைபட்டது.

கல்வித் தரம் மற்றும் செழிப்பு ஆகியவற்றில் பிகார், கேரளாவை விட பின்தங்கியிருக்கிறது. ஆனால் இந்த மாநிலத்தில் மகளிர் வாக்களிப்பு சதவிகிதம் அதிகமாக உள்ளது.

கட்டுக்கதை 2- முஸ்லிம்கள், யாதவர்கள் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு மட்டுமே வாக்களிக்கின்றனர்

பிகாரில் ஆர்ஜேடி, முஸ்லிம்கள் மற்றும் யாதவ் சாதி வாக்காளர்களின் வலுவால் தேர்தல்களில் வெற்றி பெறுகிறது என்று பலர் நம்புகிறார்கள்.

முஸ்லிம்கள் மற்றும் யாதவ் வாக்காளர்கள் ,1990 முதல் 2010 வரை மூன்று தசாப்தங்களாக லாலு பிரசாத் யாதவ் அல்லது ஆர்ஜேடிக்கு வாக்களித்தனர். ஆனால் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இது ஒரு கட்டுக்கதை மட்டுமே.

கடந்த சில ஆண்டுகளில், ஆர்.ஜே.டி கூட்டணி, முஸ்லிம்-யாதவ் வாக்காளர்களின் ஆதரவை இழந்துவருகிறது. இதை தெளிவாக பார்க்கவும் முடிகிறது. யாதவர்களில் ஒரு பகுதி , ஆர்.ஜே.டியிலிருந்து பிரிந்துவிட்டது. முஸ்லிம் வாக்காளர்களும் ஓரளவிற்கு பிரிந்துள்ளனர்.

யாதவ் வாக்காளர்களின் சிதறலை மூன்று விஷயங்களிலிருந்து அளவிட முடியும். தேர்தல் ஆண்டு, தேர்தலின் தன்மை, வாக்காளர்களின் வயது - பொருளாதார செழிப்பு ஆகியவை இந்த மூன்று விஷயங்கள்.

லோக்நீதி-சிஎஸ்டிஎஸ் ஆய்வின்படி, யாதவ் மற்றும் முஸ்லிம்கள் 1990களின் முற்பகுதி மற்றும் நடுப்பகுதி வரை லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ஆர்.ஜே.டி யுடன் இருந்தனர். அந்த நேரத்தில், ஆர்.ஜே.டி கூட்டணிக்கு , முஸ்லிம்-யாதவ் வாக்காளர்களின் சுமார் 75 சதவிகித வாக்குகள் கிடைத்தன.

இதன் பின்னர், குறிப்பாக லாலு பிரசாத் யாதவ் சிறைக்குச் சென்ற பிறகு ஆர்.ஜே.டிக்கு , யாதவர்களின் ஆதரவு குறையத் தொடங்கியது . இப்போது ஆர்.ஜே.டி கூட்டணிக்கு யாதவ் வாக்காளர்களின் 60 சதவிகித ஆதரவுகூட கிடைப்பதில்லை.

சட்டமன்ற தேர்தலா, மக்களவைத் தேர்தலா என்பதை பொருத்து யாதவர்களின் சாய்வு இருக்கிறது. யாதவ் வாக்காளர்கள் லாலு பிரசாத் யாதவுக்கு 1990களின் முற்பகுதி மற்றும் நடுப்பகுதி வரை பெருமளவு ஆதரவளித்தனர்.

அது மக்களவைத் தேர்தலாக இருந்தாலும் சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் இந்த நிலை காணப்பட்டது. ஆனால் இப்போது, ஆர்.ஜே.டி கூட்டணிக்கு ஆதரவாக, யாதவர்களின் ஒன்றிணைப்பு சட்டமன்றத் தேர்தலின் போது மட்டுமே காணப்படுகிறது. மக்களவை தேர்தலின் போது அது இல்லை.

பிரதமர் நரேந்திர மோதி மீதான ஈர்ப்பு காரணமாக, யாதவ் வாக்காளர்களில் பெரும் பகுதியினர் பாஜகவை நோக்கி நகர்ந்துள்ளனர். 2010 சட்டமன்றத் தேர்தலில், 69 சதவிகித யாதவ் வாக்காளர்கள், ஆர்ஜேடி கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால் 2019 மக்களவைத் தேர்தலின் போது அது 45 சதவிகிதமாகக் குறைந்தது.

சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தல்களில் யாதவ் வாக்காளர்களின் விருப்பம் வெவ்வேறாக உள்ளது. கூடவே வித்தியாசமும் தெளிவாக உள்ளது. உயர் வருமானப் பிரிவில் இருந்து வரும் யாதவர்கள் மற்றும் இளைய தலைமுறையினரின் சாய்வு பாஜகவை நோக்கி உள்ளது.

AIMIM (அகில இந்திய மஜ்லிஸ் இ இத்திஹதுல் முஸ்லிமீன்) கட்சி காரணமாக, ஆர்.ஜே.டி கூட்டணிக்கு முஸ்லிம் வாக்காளர்களின் ஆதரவு குறைத்துள்ளது. ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், மக்களவைத் தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்கள் ஆர்.ஜே.டி கூட்டணிக்கு ஆதரவாக அதிக ஒற்றுமையுடன் இருப்பது தெரிகிறது.

பாஜக மற்றும் நரேந்திர மோதியை விரும்பாததோடு கூடவே பெரிய தோல்வியின் அச்சம் காரணமாகவும், மக்களவைத் தேர்தலில் முஸ்லிம்கள் ஆர்ஜேடி கூட்டணிக்கு ஆதரவாகக் காணப்பட்டனர்.

ஆர்ஜேடி, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் அடங்கிய சமயசார்பற்ற மாபெரும் கூட்டணிக்கு 2015 தேர்தலில் 69 சதவிகித முஸ்லிம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர். அதே நேரத்தில் 2019 மக்களவைத் தேர்தலில் 89 சதவிகித முஸ்லிம்கள் ஆர்ஜேடி கூட்டணிக்கு வாக்களித்தனர்.

கட்டுக்கதை 3: பாஜக உயர் சாதியினரின் கட்சி மட்டுமே

உண்மை என்னவென்றால்,1990 களின் நடுப்பகுதி வரை, பிகாரில் பாஜக , உயர் சாதியினர் என்று கூறப்படும் சாதியினரின் கட்சியாக மட்டுமே இருந்தது . அதன்பிறகு நிலைமை மாறிவிட்டது. இப்போது இது ஒரு கட்டுக்கதை மட்டுமே.

இப்போது, பிகாரில் உயர் சாதியினரின் ஆதரவைப் பேணுவதோடு கூடவே, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே, குறிப்பாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் தலித்துகளிடையே பாஜக வலுவாக காலூன்றியுள்ளது.

பாஜகவும் அதன் தோழமை கட்சியான ஐக்கிய ஜனதா தளமும் தேர்தலில் 75 சதவிகிதத்துக்கும் அதிகமான உயர் சாதியினர் என்று கூறப்படும் சாதியினரின் வாக்குகளை தொடர்ந்து பெற்றுள்ளன. 2015ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது பாஜக மற்றும் ஜேடியுவுக்கு கூட்டணி இல்லை.

அப்போது பாஜகவுக்கு உயர் சாதியினரின் 84 சதவிகித வாக்குகள் கிடைத்தன. 2019 மக்களவைத் தேர்தலில் 79 சதவிகித உயர் சாதி வாக்காளர்கள், பாஜக கூட்டணிக்கு வாக்களித்தனர்.

இதோடுகூடவே, பாஜக, பிறப்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே (ஓபிசி), வலுவான இருப்பைப் பதிவு செய்துள்ளது. 2014 மக்களவைத் தேர்தலின் போது, பிறப்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த வாக்காளர்களில் 53 சதவிகிதம் பேர் பாஜகவுக்கு வாக்களித்தனர். அதே நேரத்தில் 2019 மக்களவைத் தேர்தலில், இந்த பிரிவினரின் 88 சதவிகித வாக்குகளை பாஜக பெற முடிந்தது.

2014 மக்களவைத் தேர்தலின் போது, தலித்துகளில் அதிக ஆதிக்கம் செலுத்தும் துசாத் வாக்காளர்களின் 68 சதவிகித வாக்குகளை பாஜக கூட்டணி பெற்றது. 2019 மக்களவைத் தேர்தலில், அது 88 சதவிகிதத்தை எட்டியது. ராம் விலாஸ் பாஸ்வானின் எல்ஜேபி (லோக் ஜன சக்தி கட்சி) உடனான பாஜகவின் கூட்டணி, இதற்கு காரணமாக இருக்கலாம்.

இது தவிர மற்ற தலித் வாக்காளர்களையும் பாஜக தன்னுடன் இணைத்துக்கொண்டுள்ளது. 2014 மக்களவைத் தேர்தலில், பிற தலித் வாக்காளர்களில் 33 சதவிகிதம் பேர், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்தனர். அதே நேரத்தில் 2019 மக்களவைத் தேர்தலின் போது இந்த ஆதரவு 85 சதவிகிதத்தை எட்டியது.

பிகாரில் பாஜகவின் அமைப்பு வலுவானது மற்றும் கட்சி முழுமையான உத்தியுடன் தேர்தல் களத்தில் நுழைகிறது. பாஜக எங்கு பலவீனமாக இருந்தாலும், அது பிராந்தியக் கட்சிகளுடன் இணைந்திருக்கிறது, பின்னர் படிப்படியாக அந்தக் கட்சியின் வாக்காளர்களிடையே தன் வேர்களை பரப்புகிறது.

பிகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தொடர்ந்து அதிக இடங்களில் போட்டியிடுகிறது. மாநிலத்தில் கட்சி விரிவடைந்து வருவதை இது காட்டுகிறது.

ஐக்கிய ஜனதா தளத்துடனான கூட்டணியில், தொகுதிகளுக்கான பாஜகவின் உரிமைகோரல் அதிகரித்து வருகிறது. ஜேடியு போட்டியிடும் இடங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

2005 மற்றும் 2010 சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக வேட்பாளர்கள் முறையே 102 மற்றும் 103 இடங்களிலும் போட்டியிட்டனர். ஆனால் 2020 ல் பாஜக, 121 இடங்களில் போட்டியிடுகிறது. மறுபுறம் ஜேடியு, 2005 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் முறையே 138 மற்றும் 141 இடங்களில் போட்டியிட்டது. 2020இல் 122 இடங்களில் மட்டுமே அக்கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கட்டுக்கதை 4: நிதிஷ் குமாரிருக்கு ஆதரவு குறைந்துள்ளது

நிதிஷ் குமாருக்கு ஆதரவு குறைந்துவிட்டதாகவும், அவரது சொந்த வாக்கு வங்கி பலவீனமடைந்துள்ளதாகவும் பலர் நம்புகிறார்கள். ஆனால் இது ஒரு கட்டுக்கதை.

பிகாரில் இன்றும் நிதிஷ் குமார் ஒரு பிரபலமான தலைவராக இருக்கிறார்.

பல்வேறு தேர்தல்களில், ஐக்கிய ஜனதா தளத்திற்கு அவரது முகம் காரணமாகவே வாக்குகள் கிடைக்கிறது என்று சொல்வது சரியானதே. நிதிஷ் குமார் இல்லாமல் ஐக்கிய ஜனதா தளம் ஒரு வேளை எந்தவொரு தேர்தலிலும் வெல்ல முடியாது என்றும் சொல்லலாம்.

கடந்த சட்டமன்றத் தேர்தல்களிலிருந்து ஜேடியு மட்டுமல்லாமல், தேசிய ஜனநாயக கூட்டணியின் முகமாகவும் நிதிஷ் குமார் இருந்து வருகிறார். இம்முறையும் அவரது முகம்தான் முக்கியமாக உள்ளது.

பிரதமர் நரேந்திர மோதி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர், நிதிஷ் குமார்தான் என்டிஏவின் முகமாக இருப்பார் என்று ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

இருப்பினும் நிதிஷ் குமாரின் தலைமையை எதிர்த்து, பாஜகவின் மற்ற கூட்டாளியான லோக் ஜன்சக்தி கட்சி கூட்டணியில் இருந்து பிரிந்துள்ளது. ஆனால், நிதிஷ் குமாரின் புகழ், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்குகளை பெற்றுத்தந்தது என்பதே பாஜக அவருடன் தொடர்ந்து இருப்பதற்கு காரணமாகும்.

இது வெறும் கண்ணோட்டம் மட்டுமல்ல. லோக்நீதி-சி.எஸ்.டி.எஸ் ஆய்வுகளும், பிகாரில் நிதிஷ் குமாரின் பரவலான பிரபலத்தை உறுதிப்படுத்துகின்றன.

பிப்ரவரி 2005 இல், பிகார் மக்களில் 24 சதவிகிதம் பேர், அவர் முதலமைச்சர் ஆகவேண்டும் என்று விரும்பினர். அக்டோபர் 2005க்குள் இந்த எண்ணிக்கை 43 சதவிகிதமாக உயர்ந்தது. 2010 சட்டமன்றத் தேர்தலின் போது இது 53 சதவிகிதமாக அதிகரித்தது. அந்த தேர்தலில்தான், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஒரு மகத்தான வெற்றி கிடைத்தது.

2015 இல் லாலுவும் நிதிஷும் ஒன்றுபட்டபோது கூட, அந்த மாபெரும் கூட்டணி , நிதிஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது.

பல்வேறு தேர்தல்களின் போது, நிதிஷ் குமாரின் புகழ் காரணமாக ,ஜேடியு மற்றும் பாஜக கூட்டணி வாக்குகளைப் பெற முடிந்தது என்பது தெரியவந்துள்ளது. அக்டோபர் 2005 இல் என்டிஏ கூட்டணி 37 சதவிகித வாக்குகளையும், 2010ல் 39 சதவிகித வாக்குகளையும் பெற்றது.

இந்த தேர்தல்களில் கூட்டணிக்கு கிடைத்த வாக்குகளை ஒப்பிடும்போது நிதிஷ் குமாரின் புகழ் மிகவும் அதிகமாக இருந்தது.

கட்டுக்கதை 5: மஹா தலித்துகள் எப்போதும் நிதிஷ் குமாருக்கு வாக்களிப்பார்கள்

மஹா தலித்துகள் நிதிஷ் குமாருக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் எப்போதும் அவருக்கு வாக்களிக்கிறார்கள் என்பது ஒரு கட்டுக்கதை .

இது உண்மையாக இருந்தால், 2015 ஆம் ஆண்டில் நிதிஷ் குமார்-லாலு யாதவின் மாபெரும் கூட்டணி , மஹா தலித்துகளின் வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். முந்தைய தேர்தல்களிலும், நிதிஷ் குமாருக்கு மஹா தலித்துகளின் அதிக வாக்குகள் கிடைக்கவில்லை.

ஆனால் 2010 சட்டமன்றத் தேர்தலில் அவர்களின் ஆதரவு நிதிஷ் குமாருக்கு கிடைத்தது. அதனால்தான் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றது.

லோக்நீதி-சி.எஸ்.டி.எஸ் ஆய்வின்படி, 2010 சட்டமன்றத் தேர்தலில் 38 சதவிகித மஹா தலித்துகள் என்டிஏவுக்கு வாக்களித்துள்ளனர் . இதற்கான பெருமை நிதிஷ் குமாருக்கு வழங்கப்பட்டது.

ஆனால், 2015 சட்டமன்றத் தேர்தலில், நிதிஷ் குமாரால் இந்த வாக்குகளை முழுமையாக கூட்டணிக்கு பெற்றுத்தர முடியவில்லை. நிதிஷ் குமார் இருந்த மாபெரும் கூட்டணிக்கு ஆதரவாக 24 சதவிகித மஹா தலித்துகள் மட்டுமே வாக்களித்தனர்.

மஹா தலித் வாக்காளர்கள் மீது நிதிஷ் குமாருக்கு கட்டுப்பாடு இருந்திருந்தால், கூட்டணிக்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்க வேண்டும். லோக்நீதி-சி.எஸ்.டி.எஸ் ஆய்வின்படி, மஹா தலித் வாக்காளர்களில் பெரும் பகுதியினர் 2015இல் , தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

நிதிஷ் குமார் , மஹா தலித் பிரிவினரிடையே மிகவும் பிரபலமான தலைவர் என்ற தோற்றத்தை, இந்த ஆய்வு முடிவுகள் உடைத்துவிட்டன.

2005 பிப்ரவரி மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது நிதிஷ் குமார் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தார். ஆனால் மஹா தலித்துகளின் அதிக வாக்குகள் ஆர்ஜேடி கூட்டணிக்கு கிடைத்தன.

(சஞ்சய் குமார் சிஎஸ்டிஎஸ் இயக்குநராக உள்ளார்).

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: