இந்தியாவில் 100 ஆண்டுகளை கடந்த கம்யூனிஸ்ட் கட்சி பற்றி அறிந்து கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்

  • ஜி.எஸ். ராம் மோகன்
  • ஆசிரியர், பிபிசி தெலுங்கு

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு நூறாண்டுகள் ஆகும் நிலையில், அதனையொட்டி பிபிசி வெளியிடும் தொடரின் முதல் கட்டுரை இது.

கம்யூனிசத்தைப் பற்றிய தோற்றம் இந்தியாவில் பெரிய அளவில் இல்லாதிருக்கலாம். ஐரோப்பா அல்லது எந்தவொரு கண்டத்திலும் பெரிதாக இல்லாதிருக்கலாம். ஆனால் இந்தியாவில் கம்யூனிசத்துக்கு 100 ஆண்டு கால வரலாறு இருக்கிறது. இந்த நீண்ட பயணம் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள் இங்கே பட்டியலிடப் பட்டுள்ளன.

1) தாஷ்கன்ட்டில் கட்சி உருவாக்கம் - இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் சுமுக உறவு இல்லாமை

இன்றைக்குள்ள இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சி 100 ஆண்டு கால வரலாற்றை கொண்டிருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1920 அக்டோபர் 17-ல் தாஷ்கன்ட்டில் (அன்றைய சோவியத் யூனியனில், இன்றைய உஸ்பெகிஸ்தானில் உள்ளது) தொடங்கப்பட்டது. சோவியத் யூனியனில் போல்ஷெவிக் புரட்சியின் வெற்றியின் பின்னணியில், கட்சி சர்வதேச அளவில் பரவும் நிலையில் இது தொடங்கப்பட்டது. இது தொடங்கப்பட்டதில் மனவேந்திரநாத் ராய் முக்கிய பங்காற்றினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்படுவதாக எம்.என். ராய் மற்றும் அவருடைய பங்காளர்கள் எவெலின் டிரென்ட் ராய், அபானி முகர்ஜி, ரோசா பிட்டிங்கோஃப், முகமது அலி, முகமது ஷபீக், எம்.பி.பி.டி. ஆச்சார்யா ஆகியோர் தாஷ்கன்ட்டில் அறிவித்தனர். இவர்களில் எம்.என். ராய் அமெரிக்க கம்யூனிஸ்ட்வாதியாகவும், அபானி முகர்ஜியின் கூட்டாளியான ரோசா பிட்டிங்கோஃப் ரஷிய கம்யூனிஸ்ட்வாதியாகவும் இருந்தனர். துருக்கியில் காலிப் ஆட்சியை மீண்டும் உருவாக்குவதற்கு, இந்தியாவில் ஆதரவு திரட்டும் நோக்கில் முகமது அலி, முகமது ஷபீக் ஆகியோர் ரஷியாவில் செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது மகாத்மா காந்தியும் காலிபட் இயக்கத்தை ஆதரித்தார். அந்த காலக்கட்டத்தில் தான் இந்தியாவில் இருந்து நிறைய கிலாபத் இயக்கவாதிகள், துருக்கியில் பிரிட்டனின் காலனி ஆட்சியை எதிர்ப்பதற்கு சில்க் ரூட் வழியாக துருக்கிக்கு சென்றனர். சிலர் நடந்தே அங்கு சென்றார்கள். அந்த காலக்கட்டத்தில் தான் கம்யூனிஸ்ட் கட்சி சர்வதேச அளவில் பரவிக் கொண்டிருந்தது. பிரிட்டனின் கம்யூனிஸ்ட் கட்சி, தங்களுடைய அரசுக்கு எதிராகவே போராடியது. இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஆதரித்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்த எம்.என். ராய் தான் 1917-ல் மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சியை (சமூக உழைப்பாளர்கள் கட்சி) உருவாக்கினார் என்பதில் இருந்தே, அந்த காலக்கட்டத்தில் சர்வதேச அளவில் கம்யூனிஸ்ட் கட்சி பரவியது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

நாட்டில் பல்வேறு பகுதிகளில் பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு எதிராகப் போராடி வந்த பல குழுக்களின் கவனத்தை ஈர்ப்பதாக இது இருந்தது. முக்கியமாக அமெரிக்காவுக்கு வெளியில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்த காதர் கட்சி உறுப்பினர்களிடையே இது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேசமயத்தில், காலிபட் இயக்கத்தில் பங்கேற்றிருந்த இளைஞர்கள் பெருமளவில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தனர். அத்துடன் போல்ஷெவிக் புரட்சியால் ஈர்க்கப்பட்டு, நாடு முழுக்க பல குழுக்களாக செயல்பட்டுக் கொண்டிருந்தவர்களை ஒன்று சேர்க்கும் பணிகளில் எம்.என். ராய் ஈடுபட்டார்.

படக்குறிப்பு,

எம்.என். ராய்

இருந்தபோதிலும் உறுதியாக பணியாற்றுவதற்கான செயல் திட்டம் இல்லாமல் இருந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் செயல்பாட்டைப் போலவே இந்தக் கட்சியின் செயல்பாடுகள் இருந்தன. அதில் அங்கமாக இருந்து, ஒருமித்த சிந்தனை கொண்டவர்களை தங்களுடன் இணைத்து செயல்பட்டனர். நகர்ப்புற தொழிற்சாலை மண்டலங்களில் வேலைநிறுத்தங்கள் செய்வது தான் அவர்களுடைய பிரதான செயல்பாடாக இருந்தது. 1922ல் கயாவில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற போது, சென்னையைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்வாதி சிங்காரவேல் செட்டியார் முழுமையான சுதந்திரப் பிரகடனத்தை (சம்பூர்ண சுயராஜ்ஜியம்) வெளியிட்டு கவனத்தை ஈர்த்தார்.

கட்டுப்பாடுகள் - சதி வழக்குகள்

இன்றைய சூழ்நிலையில் கட்டுப்பாடுகள் மற்றும் சதி வழக்குகள் என்று கூறினால், இந்திரா காந்தி காலத்தில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட காலம் தான் நினைவுக்கு வரும். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியில் கம்யூனிஸ்ட்கள் மீதான கட்டுப்பாடுகள் இன்னும் மோசமாக இருந்தன. சதி வழக்குகள் தொடர்வது என்ற பாணி அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் தான் உருவானது. பெஷாவர் சதி வழக்குகள், கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு ஆகியவை முக்கியமான வழக்குகளாக இருந்தன. கான்பூர் சதி வழக்கில், முக்கியமான உயர் தலைவர்கள் அனைவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.

நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட்வாதிகளுடன் எம்.என். ராய் கொண்டிருந்த அனைத்து தகவல் பரிமாற்றங்களையும் பிரிட்டிஷ் அரசு கண்காணித்து வந்தது என்பது அதன் மூலம் புரிந்தது. அந்தத் தகவல் பரிமாற்றங்களைக் கண்காணித்ததன் அடிப்படையில் சதி வழக்குகள் போடப்பட்டன. சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்திய அரசாங்கம் பிரிட்டிஷ் சட்டங்களை எடுத்துக் கொண்டது மட்டுமின்றி, கண்காணிக்கும் நடைமுறைகளையும் எடுத்துக் கொண்டது என்று நாம் கூறலாம்.

கான்பூர் மாநாடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கமும்

கான்பூர் சதி வழக்கில் (பிரிட்டிஷாரால் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது புணையப்பட்ட வழக்குகள் (கான்பூர் சதி வழக்கு) என அழைக்கப்படுகிறது.) சிறையில் இருந்து விடுதலை ஆன தலைவர்கள் 1925 டிசம்பரில் கான்பூரில் சந்தித்தனர். தாஷ்கன்ட்டில் உருவாக்கப்பட்ட கட்சியின் செயல்பாடுகளுக்கு ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து விடுபடுவதற்கு, இந்தியாவில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அப்போது முடிவு செய்யப்பட்டது. எனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்படுவதாக மீண்டும் அறிவிப்பு செய்தனர். அந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தவர்களில் முக்கியமானவராக இருந்த சத்யபாகதா அந்தக் கட்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என பெயரிடுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் மற்ற தலைவர்கள் அதை ஆட்சேபித்தனர்.

கட்சியின் சர்வதேச வழக்கத்தின்படி, நாட்டின் பெயரை கட்சியின் பெயரின் இறுதியில் தான் சேர்க்க வேண்டும் என்று கூறினர். அந்தக் கட்சியின் தலைவராக சிங்காரவேல் செட்டியாரும், செயலாளராக சச்சிதானந்த விஷ்ணு காட்டேவும் இருந்தனர். இருந்தபோதிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்ட ஆண்டில், கட்சியில் பல குழுக்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தன. தாஷ்கன்ட்டில் உருவாக்கப்பட்டது தான் முதலாவது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் பல்வேறு மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சிகள் கூறின. இப்போதைய கம்யூனிஸ்ட் கட்சி, இந்தக் கட்சி 1925ல் தொடங்கப்பட்டது என்று ஏற்றுக் கொண்டிருக்கிறது. இதுதான் முதலாவது கம்யூனிஸ்ட் கட்சி என அங்கீகரிக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கம் பற்றிய இந்தக் கருத்து வேறுபாடு இன்றைய காலத்திலும் தொடர்கிறது.

2) வெள்ளையனே வெளியேறு இயக்கமும், கம்யூனிட் கட்சியின் இமாலய தவறும்

படக்குறிப்பு,

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

மகாத்மா காந்தி தலைமையில் 1942 ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கம்யூனிஸ்ட்கள் சிந்தனை வேறு மாதிரியாக இருந்தது. அப்போது அவர்கள் எடுத்த தவறான முடிவு, அப்போதிருந்து அவர்களுக்கு உறுத்தலாகவே இருந்து வருகிறது. அப்போது மேற்கொண்ட முடிவு தங்களை தனிமைப்படுத்தி விட்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கைகளிலும் அந்தக் கட்சி ஒப்புக்கொண்டிருக்கிறது. அது இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயம். அப்போது நாஜி படைகள் சோவியத் யூனியனை குறிவைத்து நகர்ந்து கொண்டிருந்தன. சோவியத் யூனியனின் செல்வாக்கு மிகுந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும், இதுகுறித்த தாக்கம் பலமாக உணரப்பட்டது.

உலகப் போர் மக்களின் போர் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. அந்தப் போரில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகியவை ஒரு பக்கமாகவும், சோவியத் யூனியன், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகியவை இன்னொரு பக்கமாகவும் நின்று போரிட்டன. அதாவது சோவியத் யூனியனின் தோழமையாக பிரிட்டன் இருந்தது. இந்தச் சூழ்நிலையில், பிரிட்டனுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நடத்தினால், நாஜி படைகளைத் தோற்கடிக்கும் கூட்டுப் படையினரின் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்குப் பின்னடைவாக இருக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருதியது. நாஜி படைகளுக்கு எதிராகப் போரிடுவதற்கு, தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் கூட பிரிட்டிஷ் அரசுக்கு அந்தக் கட்சி கோரிக்கை வைத்தது. பிரிட்டிஷாரை அடிபணிய வைப்பதற்கு இதுதான் சரியான தருணம் என்பது மகாத்மா காந்தியின் கருத்தாக இருந்தது. இருந்தாலும் சோவியத் யூனியனின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, வெள்ளையனே வெளியேறு இயக்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

3) கட்சியில் பிளவும், நகரப் பகுதிகளில் இருந்து கிராமப் பகுதிகளுக்கு விரிவாக்கம் பெற்றதும்

இந்தியாவுக்கு 1947-ல் சுதந்திரம் கிடைத்தது. நேரு சோஷலிஸ்ட்டாகக் கருதப்பட்டார். சோஷலிஸ அரசை அவர் நடத்தி வருவதாகக் கூறப்பட்டது. 1949 ஆம் ஆண்டில் மாவோ தலைமையில் நடந்த கம்யூனிஸ்ட் புரட்சி சீனாவில் மாற்றத்தை ஏற்படுத்தியது. சர்வதேச அரங்கில் சோவியத் யூனியனின் இடத்தை சீனா பிடித்துக் கொண்டது. அத்துடன், மூன்று முக்கிய உழவர்கள் இயக்கங்கள் காரணமாக சீன மாடல் மீது மக்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தியது. சுதந்திரம் மூலமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சில தயக்கங்கள் ஏற்பட்டன என்றால், சீன புரட்சி காரணமாக அதன் செயல் திட்டம் மற்றும் பாதை குறித்து பல கேள்விகளை உருவாக்கியது.

காங்கிரஸ் தலைமையில் பெற்ற சுதந்திரத்தை எந்த வகையில் எடுத்துக் கொள்வது என்பது முதலாவது தயக்கமாக இருந்தது. நமக்குக் கிடைத்திருப்பது அதிகார ஒப்படைப்பு தானே தவிர, சுதந்திரம் கிடையாது என்று சுதந்திரம் பெற்ற ஆரம்ப காலத்தில் கம்யூனிஸ்ட்கள் தீர்மானங்களை நிறைவேற்றினர். காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு எதிராகப் போராட வேண்டாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு சோவியத் யூனியன் அறிவுறுத்தியது. இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இரு பிரிவுகள் உருவாயின.

நேரு சுதந்திரமாக செயல்படுபவர், சோஷலிஸ்ட் என அறியப்பட்டவராக இருப்பதால், காங்கிரஸ் கட்சியில் உள்ள இடதுசாரி சிந்தனையாளர்களுடன் இணைந்து செயல்பட்டு தங்களுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று சோவியத் யூனியனின் நிலைப்பாட்டைப் பின்பற்றி முதலாவது குழுவினர் கூறினர். இந்தியா முழுமையான சுதந்திரத்தை இன்னும் பெறவில்லை, ஏகாதிபத்திய சக்திகளின் கைப்பாவையாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று இன்னொரு குழுவினர் கூறினர். சீனாவின் நிலைப்பாட்டைப் பின்பற்றி போராடுவது என்று அவர்கள் முடிவு செய்தனர்.

4) தீவிர இடதுசாரி - கிராமங்கள் முதல் வனங்கள் வரை

கட்சியில் பிளவு ஏற்பட்ட பிறகு, தீவிர-இடதுசாரி அல்லது மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சிகளின் காலமாக மாறிவிட்டது. கிராமப் பகுதிகள் என்பதில் இருந்து வனங்கள் என்ற அளவில் கவனம் திசைமாறியது. கட்சியில் ஆரம்ப பிளவை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சி உருவானது. அதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது. ஆனால், சி.பி.ஐ. (எம்.) கட்சியில் இருந்து பிரிந்து மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் குழுக்கள் உருவாகி, மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சிகள் உருவாக அதிக காலம் ஆகவில்லை. ஆரம்பத்தில் சி.பி.ஐ. (எம்) கட்சியினர் சீனாவின் பாதையைப் பின்பற்றினர்; ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்துச் சென்றனர். பிறகு கேரளா பாதையில் அவர்கள் கவனம் செலுத்தினர்.

சாரு மஜும்தார் வழிகாட்டுதலின் கீழ், ஜங்கல் சாந்தல் மற்றும் கனு சன்யாள் தலைமையில் உருவான நக்சல்பாரி இயக்கத்தின் எழுச்சி, நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றில் புதிய கட்டத்தை உருவாக்கியது. அதை இந்தியாவின் மீதான இளவேனில் இடி என்று சீனாவின் மார்னிங் ஸ்டார் என்ற பத்திரிகை வர்ணித்தது. நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் இது விரைவில் பரவும் என்று அந்தப் பத்திரிகை கூறியது.

5) கம்யூனிஸம் காலாவதியாகிறதா - குற்றச்சாட்டு

1952 மற்றும் 1957 தேர்தல்களில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் இன்றைய நிலவரம் என்ன? சி.பி.ஐ. (எம்) கட்சிக்கு மக்களவையில் இரண்டு உறுப்பினர்கள், சி.பி.ஐ. கட்சிக்கு 2 உறுப்பினர்கள், ஆர்.எஸ்.பி. கட்சிக்கு ஓர் உறுப்பினர் உள்ளனர். இந்தியா கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களை நோக்கி நகரும் நேரத்தில், அதற்கு நேர் எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகளின் இயக்கம் நகரங்களில் இருந்து கிராமங்களை நோக்கியும், கிராமங்களில் இருந்து வனங்களை நோக்கியும் நகர்கிறது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். தங்களின் கோட்டையாக இருந்த மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை இழந்த பிறகு, அக் கட்சியின் தொண்டர்கள், சித்தாந்த ரீதியில் தங்களுக்கு எதிரான பாரதீய ஜனதா கட்சியை நோக்கி திரும்பியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டம் மேற்கொண்ட கட்சிகளும் கூட நெருக்கடியில் இருக்கின்றன. தாங்கள் ஏன் வனங்கள் என்ற சிறிய எல்லைக்குள் முடங்கி இருக்க வேண்டும், சமவெளிப் பகுதிகளுக்கு ஏன் விரிவாக்கம் செய்யக் கூடாது, இளைஞர்களின் வளர்ச்சிக்கான வழிகளை உருவாக்க ஏன் தவறிவிட்டோம் என்று சி.பி.ஐ. (மாவோயிஸ்ட்) தலைவர் கோபட் சாண்டி சில ஆண்டுகளுக்கு முன்பு எக்கனாமிக் மற்றும் அரசியல் வார இதழில் எழுதியிருந்தார்.

கம்பூனிஸ்ட் கட்சிகளுக்கான தேவை, அவர்களின் பலங்கள் மற்றும் பலவீனங்கள் குறித்த இரண்டு விஷயங்கள் உள்ளன.

1. நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கு எதிராக செயல்பட்டதைப் போல, முதலாளித்துவ சக்திகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட் சக்திகளால் தாக்குபிடிக்க முடியவில்லை. முதலாளித்துவத்தை முறியடிக்க வேண்டும் என்பதுதான் சித்தாந்த ரீதியில் கம்யூனிஸம் என பெரும்பாலும் பேசப்பட்டாலும், முதலாளித்துவ சக்திகளுக்கு எதிராகப் போராடும் வசதிகள் கம்யூனிஸ்ட்களிடம் இல்லை. அதனால் தான் மிகவும் பின்தங்கிய பகுதிகளில், அடக்குமுறைக்கு எதிராக பெருமளவில் மக்களை அவர்களால் திரட்ட முடிகிறது. ஆனால் அரசின் தலையீடு காரணமாகவோ அல்லது சமூக முன்னேற்றம் காரணமாகவோ அங்கு நிலைமை முன்னேறினால், அதுபோன்ற பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிக்கான தேவை குறைந்து வருகிறது. இதன் காரணமாக இன்னும் விரிவான, அடிப்படை திட்டங்களுக்கான தேவை இருக்கிறது. உலக அளவில் முதலாளித்துவம் தன்னுடைய வடிவத்தை மாற்றிக் கொண்டுள்ளது, ஆனால் கம்யூனிஸம் மாறாமலே இருக்கிறது.

2. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாதிய அமைப்புகள் மீது கவனம் செலுத்தி இருக்க வேண்டிய நிலையில், அது குறித்து புரிந்து கொள்ளவோ அல்லது கவனம் செலுத்தவோ இல்லை. இந்தியாவில் சாதிய அமைப்புகள் நடைமுறை யதார்த்தமாக உள்ளன. சீனா, ரஷியா போன்ற நாடுகளின் கண்ணோட்டங்களில் அனைத்து வழிமுறைகளையும் கம்யூனிஸ்ட்கள் பின்பற்றியுள்ளனர். ஆனால் சாதிய விஷயம் பற்றி அதிக செயல்பாடு இல்லாமல் போய்விட்டது. இந்திய அரசியலில் சாதியின் பங்களிப்பு குறித்து அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. எஸ்.ஏ. டாங்கே காலத்தில் அம்பேத்கர் சமூக போராட்டங்களை முன்னெடுத்து நடத்தினார். ஆனால் அவர்கள் அதை பெரிய விஷயமாகக் கருதவில்லை. அஸ்திவாரம் மற்றும் மேல்கட்டுமானம் என்பவை போன்ற வார்த்தைகளால் சாதி என்ற விஷயத்தை குறைத்து மதிப்பிட்டார்கள். இவற்றின் விளைவுகளை இப்போது எல்லோரும் பார்க்கிறார்கள். சமூக தலைமையை எட்டுவதற்கான ஒரு கருவியாக, அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்கும் சக்தியாக சாதிய அமைப்பு மாறிவிட்ட நிலையில், கம்யூனிஸ்ட்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதைத் தவிர, வேறொன்றும் செய்வதற்கில்லை. சாதிய அமைப்பு முறையை ஒழிக்க வலுவான ஒரு செயல் திட்டத்தை அவர்களால் உருவாக்க முடியாது. இப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான அணுகுமுறைகள் மற்றும் உத்திகளும் அவர்களிடம் இல்லை.

இருந்தபோதிலும், இதுபோன்ற பலவீனங்களை எதிர்த்து வெற்றி கொள்வோம் என்று அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூறுகின்றன. நாடாளுமன்றத்திற்கு எத்தனை உறுப்பினர்களை அனுப்புகிறோம் என்பதை வைத்து கம்யூனிஸ்ட் கட்சியின் பலத்தை கணக்கிடக் கூடாது என்று சி.பி.ஐ. (எம்.) மூத்த தலைவர் சீதாராம் எச்சூரி பிபிசி தெலுங்கு செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறினார். மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பங்களிப்பு கணிசமாக உள்ளது என்கிறார் அவர். ஒவ்வொரு துறையிலும் ஆதிக்க சக்திகளுக்கு எதிரான போராட்டங்கள் நடத்துவது, சமூகத்தில் மக்களிடம் ஆக்கபூர்வ சிந்தனையை உருவாக்குவதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் முக்கிய பங்களிப்பு செய்வதாக அவர் குறிப்பிடுகிறார்.

அலுவலர்கள், உழவர்கள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் கம்யூனிஸ்ட்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்கிறார்கள் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். ஆக்கபூர்வமான பல சட்டங்களை உருவாக்குவதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் நெருக்குதல் தந்திருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. தீவிர அடக்குமுறை, தீவிர பாகுபாடு மற்றும் சமத்துவம் மறுக்கப்படும் பகுதிகளில், மிகவும் பின்தங்கிய பகுதிகளில் அந்த மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தருவதில் கம்யூனிஸ்ட்கள் முக்கிய பங்காற்றி உள்ளனர் என்பதை பல்வேறு வரலாற்றாளர்களின் பதிவுகள் மூலம் அறிய முடிகிறது. கொத்தடிமை முறை ஒழிப்பு, நில சீர்திருத்தங்கள் மூலம் நிலங்களை பிரித்து அளித்தது போன்ற உரிமைகளை அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியுள்ளனர். இந்த 100 ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் செயல்பாடு குறித்து நிறைய ஆய்வுகள் உள்ளன. இன்றைய காலக்கட்டத்தில் வரலாற்று நெருக்கடியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன என்பது உண்மை. தங்களுடைய போராட்டங்கள் தொடர்ச்சியாக நடக்கக் கூடியது என்றும், எதிர்காலத்தில் தாங்கள் பலம் பெறுவோம் என்றும் நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள மற்றும் நாடாளுமன்றத்தில் இடம் பெறாத இடதுசாரிகள் கூறுகின்றனர்.

ஆனால், சமூகத்தில் நடைபெறும் தீவிர மாற்றங்களுக்கு ஏற்ப இந்தக் கட்சிகள் மாற்றத்தை ஏற்படுத்தி, தங்களின் தேவையை உணரச் செய்ய முடியுமா என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது. அரசாங்க அமைப்பை காணாமல் போகச் செய்வது என்ற பிரகடனத்தைச் செய்த கம்யூனிஸம், தாங்களே காணாமல் போவதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியுமா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: