மதுரை எய்ம்ஸ் உறுப்பினராகும் சுப்பையா சண்முகம்: எதிர்கட்சிகள் கண்டனம்

பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!!தேசிய, சர்வதேச மற்றும் தமிழ்நாடு சார்ந்த இன்றைய பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.முக்கிய நிகழ்வுகளும், செய்தி முன்னேற்றங்களும் இங்கே பகிரப்படும்.

பெண்ணைத் துன்புறுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட மருத்துவர் சுப்பையா சண்முகம், மதுரை எய்ம்ஸ் வாரிய உறுப்பினராக நியமித்திருப்பதற்கு தமிழக எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவனையின் தலைவர் மற்றும் வாரிய உறுப்பினர்களை இந்திய அரசு இன்று அறிவித்துள்ளது. அதன்படி புதுச்சேரியில் உள்ள ஜிப்மெர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.எம். கடோச், மதுரை எய்ம்ஸின் தலைவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் வாரிய உறுப்பினர்களாக டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், இந்திய அரசின் சுகாதார சேவைகளின் தலைமை இயக்குநர், இந்திய சுகாதார துறையின் கூடுதல் செயலர், சுகாதாரத் துறையின் செயலர், தமிழக அரசின் தலைமைச் செயலர், இந்திய அறிவியல் காங்கிரஸ் தலைவர் டாக்டர் விஜயலட்சுமி சக்ஸேனா, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் பிரிவின் தலைவர் டாக்டர் காமேஸ்வர் பிரசாத், ஜோத்பூர் எய்ம்சின் சமூக மருத்துவப் பிரிவின் தலைவர் பங்கஜ ராகவ், திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸின் இருதயவியல் பிரிவு பேராசிரியர் வனஜாக்சம்மா, ஆக்ராவில் உள்ள சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரியின் அறுவை சிகிச்சைத் துறையின் பேராசிரியர் பிரசாந்த் லவனியா, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் புற்றுநோய் அறுவை சிகிச்சையியல் துறையின் தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் சுப்பையா சண்முகம், மதுரை எய்ம்ஸின் வாரியக் குழுவில் இடம்பெற்றிருப்பதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், சுப்பையா சண்முகத்தின் நியமனத்தை திரும்பப்பெறாவிட்டால் கடுமையான முறையில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் தி.மு.க மக்களவை குழு துணைத் தலைவர் கனிமொழி, "இது அநாகரிகமான செயலை ஏற்கும் நடவடிக்கையா அல்லது பா.ஜ.க. தொண்டர்கள் இதுபோல நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான ஊக்க நடவடிக்கையா?" என்று கேட்டிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், இது பெண்மையை இழிவுபடுத்தியதற்காகக் கொடுக்கப்படும் பரிசா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

"விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக சுப்பையா சண்முகத்தை நியமித்திருப்பது, அவர் RSS உறுப்பினர் என்பதற்காகவா அல்லது பெண்மையை இழிவுபடுத்தியதற்காக கொடுக்கப்படும் பரிசா ? இது தான் மநு சாஸ்திரத்தின் வழி ஆட்சியோ ?" என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கரூர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி, ஒரு பெண் வீட்டின் முன் சிறுநீர் கழித்து,அவரிடம் ஆபாசமாக அறுவெறுப்பாக நடந்துகொண்ட பிஜேபியின் சண்முக சுப்பையாவை,மத்திய அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவகல்லூரி உறுப்பினராக நியமித்திருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. பெண்களை,மருத்துவத்துறை இதை விடவும் யாரும் இழிவு படுத்திவிடமுடியாது என்று தனது ட்விட்டர் பக்ககத்தில் கூறியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், "பெண்ணை துன்புறுத்திய குற்றச்சாட்டில் வழக்கு பதியப்பட்டவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக நியமனம்: இது பெண்களை அவமதிப்பதில்லையா?" என்று கேட்டிருக்கிறார்.

மதுரை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனும் இதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார். "தோப்பூரில் அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக ABVP அமைப்பைச் சேர்ந்த சுப்பையா சண்முகத்தை நியமித்திருப்பது அவர் செய்த இழிவு செயலுக்காக கொடுக்கப்படும் பரிசா?" என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தனது பக்கத்து வீட்டில் குடியிருந்த 62 வயது பெண்மணியை துன்புறுத்தியதாக சுப்பையா சண்முகம் மீது புகார் எழுந்தது. காலியாக இருந்த பார்க்கிங் இட பிரச்சனை தொடர்பாக அந்த பெண்மணியின் வீட்டின் முன்பாக சுப்பையா குப்பைகளைக் கொட்டும் காட்சிகளும் சிறுநீர் கழிக்கும் சிசிவிடி காட்சிகளும் சமூக ஊடகங்களில் வெளியாயின. ஆனால், இந்த காணொளி பொய்யானது என்று கூறிய சுப்பையா சண்முகம் தனது மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டபோதும், சில நாட்களுக்குப் பிறகு அந்தப் பெண்மணி புகாரைத் திரும்பப்பெற்றுக்கொண்டார்.

பாஜக மகளிர் அணி அகில இந்திய தலைவராக வானதி ஸ்ரீனிவாசன் நியமனம்

பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய மகளிர் அணி தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வானதி ஸ்ரீனிவாசன் (50) நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கோயம்புத்தூரின் உளியம்பாளையம் கிராமத்தில் பிறந்த இவர், தனது அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப காலம் முதல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார்.

ஆரம்பத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்காக தாமரை சக்தி என்ற இயக்கத்தை நிறுவிய இவர், விளையாட்டில் பெண்களுக்கு பாலின பரிசோதனை நடத்தும் நடவடிக்கைக்கு எதிராக ஆசிய விளையாட்டுகளில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை சாந்தி செளந்தராஜனுக்காக சாந்திக்கு நீதி என்ற இயக்கத்தை முன்னெடுத்தார்.

2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டபோதும் அவர் தோல்வியடைந்தார். 2016ஆம் ஆண்டு தேர்தலில் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட அவருக்கு 33,113 வாக்குகள் கிடைத்தன.

பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்தியா முழுவதும் உள்ள பாலியல் தொழிலாளர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் ரேஷன் அட்டை இல்லா விட்டாலும் கூட சீராக ரேஷன் மளிகை பொருட்கள் வழங்க வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தர்பார் மஹிளா சமன்வாய கமிட்டி என்ற அமைப்பு தாக்கல் செய்த மனுவை கடந்த மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், கொரோனா பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷனில் மளிகை பொருட்கள் கிடைக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு ரேஷன் அட்டையோ, பிற அடையாள ஆவணமோ இல்லாவிட்டாலும் மளிகை பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு புதன்கிழமை நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மணிப்பூர் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேசிய அளவிலான பாலியல் தொழிலாளர்களின் விவரங்களை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்திருந்தாலும், எந்த திட்டத்தின் அடிப்படையில் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்குவது என்ற கேள்வி எழுகிறது என்று முறையிட்டார். மேலும், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷனில் பொருட்களை வழங்க நிதி ஒதுக்குமாறு இந்திய உள்துறைக்கு கடிதம் எழுதியபோது, பேரிடர் நிவாரண நிதியை இந்த பணிக்காக வழங்க அனுமதியில்லை என்று பதில் வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், இது ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் பிரச்னை மட்டுமல்ல. வடகிழக்கில் உள்ள எல்லா மாநிலங்கள் மற்றும் தேசிய அளவில் நிலவும் பிரச்னை. இந்த மாநிலங்கள் அனைத்தும் நிதித்தேவைக்கு மத்திய அரசின் உதவியை நாடியே காத்திருக்கின்றன. இந்த விவகாரத்தில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பை நாடினால், அந்த அமைப்பு மத்திய அரசிடம் பேசி ரேஷன் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தனர்.

முன்னதாக, மனுதாரர் சார்பில் கோவிட்-19 பெருந்தொற்றால் வருவாய் இழந்து தவிக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 5,000 ரொக்கம், மாதந்தோறும் ரேஷனில் மளிகை பொருட்கள், பள்ளி செல்லும் அவர்களின் பிள்ளைகளின் கல்வித்தேவைக்காக ரூ. 2,500, முக கவசம், சோப்பு, மருந்துகள், கை சுத்திகரிப்பான்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

மேலும், பாலியல் தொழிலாளர்களாக தங்களை பதிவு செய்ய அனுமதிக்க தொழிலாளர் நலத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கிடைக்கும் பலன்களை பதிவு பெற்ற பாலியல் தொழிலாளர்களுக்கும் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

பெண் விமான பயணிகள் ஆடையை கழற்றி சோதனை: மன்னிப்பு கேட்ட கத்தார்

கத்தாரில் உள்ள தோஹா விமான நிலையத்தில் 10 விமானங்களில் இருந்த பெண்களுக்கு , சமீபத்தில் குழந்தை பெற்றார்களா என ஆடையை கலைந்து மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது, பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.

இது தொடர்பாக பரிசோதனை செய்யப்பட்ட பெண்கள் வழங்கிய புகார்கள் குறித்து விசாரிக்கப்படும் என கத்தார் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 2ஆம் தேதி ஹமாத் விமான நிலைய குப்பைத்தொட்டியில் கைக்குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அந்தக் குழந்தை யாருடையது என கண்டறியும் நோக்கத்தில், விமானத்தில் வந்த பெண்களை அழைத்து சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

இவர்களில் பல நாட்டு பெண்களுடன் 18 ஆஸ்திரேலிய பெண்களும் இருந்ததாக ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ள கத்தார் அரசாங்கம், குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தை தோஹாவில் மருத்துவ பாதுகாப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

அக்குழந்தை பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு குப்பைத் தொட்டியில் போடப்பட்டதாகவும், அதன் பெற்றோரை உடனடியாக கண்டறியும் நோக்கில் விமான நிலையத்தில் இவ்வாறு நடந்ததாகவும் அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது.

இதுபோன்ற மோசமான குற்றம் செய்த குற்றவாளிகள் தப்பிக்க கூடாது என்ற நோக்கத்தில் அப்படி ஒரு சோதனை நிகழ்ந்ததாகவும், இதனால் பயணிகளுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் தனி மனித சுதந்திரத்தை மீறியதற்கு வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் கத்தார் நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

ஆஸ்திரேலியா என்ன கூறுகிறது?

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய நாட்டு பெண்கள் அந்நாட்டு அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்ட பிறகே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

இப்பெண்கள் ஆம்புலன்சுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அவர்களது உள்ளாடையை நீக்கிய பிறகு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண்கள், ஆஸ்திரேலிய அரசிடம் மருத்துவ ரீதியான உதவிகளைப் பெற்றதாக அதனை நேரில் பார்த்தவர் ஒருவர் தெரவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :